இந்தியாவில் உள்ள நடுத்தர வகுப்பினரின் வளர்ச்சிதான் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விலைகள் உயரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியது முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உணவு ஏற்றுமதியாளரே தவிர இறக்குமதியாளர் அல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
"உண்மையில் இந்தியா ஒரு உணவு இறக்குமதியாளர் அல்ல. இந்தியா ஒரு ஏற்றுமதியாளர். உலகளவிலான உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான் காரணம் என்று கூறுவது முற்றிலும் தவறானது" என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் மணீஷ் திவாரி பி.டி.ஐ. நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"பருவநிலை மாற்றத்தினாலும், வளர்ந்த நாடுகளில் உள்ள வேளாண் நிலங்களை எத்தனால் உற்பத்திக்காகச் சீரமைப்பதனாலும்தான் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார் அவர்.
நாட்டில் உணவுத் தேவை அதிகரிக்குமானால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "கடந்த 1970 களில் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சி நடந்தபோது கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சி, நமக்கு உணவுத் தேவையில் தன்னிறைவை ஏற்படுத்தியது. அப்போது முதல் நமது நாடு பின்தங்கவில்லை. இப்போது இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது" என்றார் திவாரி.
அடுத்த நான்கு ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை 4 விழுக்காடாக அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.