தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் தீர்க்கும் வகையில் எல்லா நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் மக்கள் நீதிமன்றத்தைத் துவக்கி வைத்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதித்துறை முன்பு தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் நீதிமன்றங்களை கூட்டி வழக்குகளைத் தீர்ப்பதற்கு நீதிமன்றங்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
மிகப்பெரிய அளவில் மக்கள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு உயர் நீதிமன்றங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வழக்குகள் தள்ளிவைக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
"பெருமளவில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் வகையிலும், நீதிமன்றங்களில் காத்துக் கிடக்கும் மனுதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் மக்கள் நீதிமன்றங்கள் வந்துள்ளன" என்றார் நீதிபதி பாலகிருஷ்ணன்.
நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள 45 வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையில், அதில் 50 விழுக்காடு வழக்குகள் தீர்க்கப்பட்டாலே அது மிகப்பெரும் வெற்றி என்று குறிப்பிட்டார் அவர்.
எளிதில் தீர்க்கப்படக் கூடிய குற்ற வழக்குகள், வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் போன்றவற்றை தீர்ப்பதற்கு மக்கள் நீதிமன்றங்கள் உதவும் என்றார் அவர்.