உலகப் பொது மன்னிப்பு அமைப்பின் இந்தியக் கிளை கடந்த 50 ஆண்டுகாலமாக உச்ச நீதிமன்றம் வழங்கிய சுமார் 700 மரண தண்டனை தீர்ப்புகளை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நீதித்துறை மரண தண்டனை குறித்த சர்வதேச விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது.
வெள்ளியன்று இந்த அறிக்கையை வெளியிட்ட உலக பொது மன்னிப்பு அமைப்பின் இந்தியக் கிளை இயக்குனர் முகுல் சர்மா, சமூக உரிமைக்கான மக்கள் மன்றத் தலைவர் (தமிழ் நாடு, புதுச்சேரி) தலைவர் வி.சுரேஷ் ஆகியோர், மரணதண்டனை தீர்ப்புகளில் உள்ள மிகப்பெரிய தவறுகளை திருத்த ஒரே வழி மரண தண்டனையையே ரத்து செய்வதுதான் என்றார்கள்.
2006, 2007ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 140 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபகால அதிகார பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2005 டிசம்பர் வரை 273 பேர் மரணதண்டனை பட்டியலில் உள்ளனர். மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள கைதிகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய உலக பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிப்பது அரிதிலும் அரிதான (Rarest of Rare Cases) தண்டனையாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம கூறியிருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தன்னிச்சையாகவும், சட்ட நுணுக்கமற்றதாகவும், இழிவு கற்பிப்பதாகவும் உள்ளது தங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறினர்.
மேலும் டாக்டர் சுரேஷ் கூறுகையில், மரண தண்டனை தீர்ப்புகள் இன்னமும் தொடர்ந்து வரும் அதே வேளையில் அதனை இனச் சிறுபான்மையினர், ஏழைகள், மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இதனை பயன்படுத்தும் அபாயமும் தொடர்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
-தீர்ப்புகளில் ஏற்றத்தாழுவுகளை களைய மரண தண்டனையை முற்றிலும் அகற்றுவதே ஒரே சிறந்த வழி என்று கூறுகிறார் டாக்டர் சுரேஷ்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றம் இல்லாமிலிருப்பது (2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மரண தண்டனையைத் தவிர) இந்திய நாட்டு மக்கள் மரண தண்டனை இல்லாமல் இருப்பதையே விரும்புகின்றனர் என்பதையே காட்டுகிறது என்று உலக பொது மன்னிப்பு அமைப்பின் இந்தியப் பிரிவு கூறியுள்ளது.
மரண தண்டனையை இந்தியா அகற்றிவிடுமேயானால் 27 ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டியலில் சேரும். இந்த 27 நாடுகளும் சட்ட ரீதியாகவோ அல்லது நிறைவேற்ற அளவிலோ மரண தண்டனையை அகற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.