இந்தியா உரிய நேரத்தில் அணுசக்தி உடன்பாட்டை பெறும் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா கூறினார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் பக்ரோடியா, "அமெரிக்காவில் பாரக் ஒபாமா அல்லது ஹிலாரி கிளிண்டன் என யார் ஆட்சிக்கு வந்தாலும் உடன்பாடு நிறைவேறும். இந்தியா உரிய நேரத்தில் அணுசக்தி உடன்பாட்டைப் பெறும்" என்றார்.
இந்த விடயத்தில் மத்திய அரசு மெதுவாகச் செயல்படுவது ஏன் என்று கேட்டதற்கு, "எங்கள் கூட்டணிக் கட்சிகளிடையில் கருத்தொற்றுமையை உருவாக்குவது அவசியம். இந்த முயற்சியை நீங்கள் பாராட்ட வேண்டும். நாங்கள் மெதுவாகச் செயல்படுகிறோம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் உடன்பாடு நிச்சயம் நிறைவேறும். அதற்கான தகுதியும் திறனும் அரசுக்கு உள்ளது. இந்த உடன்பாடு இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் நல்லது" என்றார் அவர்.
அணுசக்தி உடன்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பது பற்றி விமர்சித்த பக்ரோடியா, அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளதாக குற்றம்சாற்றினார்.