இந்தியாவில் மது உற்பத்தி கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலகளவில் மிகப்பெரிய மது உற்பத்தி நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அதிகரித்து வரும் மது உற்பத்தி பற்றி 'ஆல்கஹால் அட்லஸ் ஆஃப் இந்தியா' எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த விவரங்கள் வருமாறு:
தென் கிழக்கு ஆசியாவில் உற்பத்தியாகும் மது வகைகளில் 65 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தியாகிறது. இறக்குமதி செய்யப்படும் மது வகைகளில் 7 விழுக்காட்டிற்கும் மேல் இந்தியாவிற்கு வருகிறது.
இந்த மண்டலத்தில் விற்பனையாகும் ஒட்டுமொத்த மது வகைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேல் இந்தியாவில் விற்பனையாகிறது.
நமது நாட்டில் மது வகைகள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1992- 93 இல் 887.2 மில்லியன் லிட்டராக இருந்த மது உற்பத்தி 1999- 2000 த்தில் 1,654 மில்லியன் லிட்டராக அதிகரித்தது. இது 2007- 08 இல் 2,300 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின்படி மது வகைகள் பயன்பாடு குறைவாகத்தான் உள்ளது. அதாவது ஒரு ஆண்டிற்கு ஒரு நபர் 2 லிட்டர் மது மட்டுமே உட்கொள்கிறார்.
பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மது வகைகள் பயன்பாடு அதிகமாக உள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளைவிட அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், சிக்கிம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் மது உட்கொள்கின்றனர்.