ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை தொல்லியல் துறை நடத்தும் அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் கண்டறியாமல் ராமர் பாலத்தை இடிக்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.
ரூ.2,400 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவங்குவதற்கு முன்பு, ராமர் பாலம் என்பது பாரம்பரிய சின்னமா என்று விசாரிக்காமல் பெருமளவிளான மக்கள் பணத்தை மத்திய அரசு செலவிட்டுள்ளது ஏன் என்பது தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தண்டி சுவாமி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால், ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல இயற்கையாக உருவானதுதான் என்று அரசு தனக்குத்தானே திருப்தி செய்துகொண்டு விட்டது என்றார்.
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்று தொல்லியல் துறையின் மூலம் ஆய்வு நடத்திக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதைத் தவிர்ப்பதன் மூலம் அரசு இதயமற்று நடந்து கொள்கிறது என்று குற்றம்சாற்றிய அவர், ராமர் பாலம் இடிக்கப்பட்ட பிறகு அது மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்று ஆய்வு முடிவு தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதை அரசு கூற வேண்டும் என்றார்.
அப்போது, ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதென்று தெரிவிக்கும் இந்திய மண்ணியல் துறையின் முன்னால் தலைமை இயக்குநரின் அறிக்கையை வழக்கறிஞர் வேணுகோபால் மேற்கோள் காட்டினார்.
அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரசு சொந்தமாகத் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ள உண்மைகளுக்குப் புறம்பான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளதாகக் கூறினார்.
ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா என்பதைக் கண்டறிய எந்த ஆய்வும் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தனது வாக்குமூலத்தில் கூறவில்லை என்றார் வழக்கறிஞர் வேணுகோபால்.
மற்றொரு மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிறிராம் குஞ்சு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால் சுனாமி பாதிப்பு அதிகரிக்குமா, பேரிடர் மேலாண்மைப் பணிகள் பாதிக்குமா அல்லது சுற்றுச்சூழல் மாறுமா என்பது உள்ளிட்ட எந்த விடயம் பற்றியும் மத்திய அரசு விரிவான ஆய்வு நடத்தவில்லை என்றார்.
வனஉயிரியல் சட்டம், மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
இவ்வழக்கின் முக்கிய மனுதாரரான சுப்பிரமணியம் சாமி, "இத்திட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கும் தொடர்புள்ளது. அதனால்தான் சிறிலங்காவிற்குச் செல்வதற்காக கடவுள் ராமர் ராமர் பாலத்தைக் கட்டினார் என்ற நமது நாட்டின் 80 கோடி மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மீறி இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு அவசரம் காட்டுகிறது" என்றார்.
முன்னதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இவ்வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர். பாலுவையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் கப்பல்கள், அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய மீனம் ·பிஷரிஸ் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்றும், எனவே இத்திட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் உள்ளது என்றும் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
இறுதியில் வாதங்கள் முடிவடையாத நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 6 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 270 கிலோ மீட்டர் நீளமுள்ள சேது சமுத்திரத்தில் 31 மீட்டர் மட்டுமே ராமர் பாலம் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.