மக்களவை உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளையும் அவற்றை மீறும் உறுப்பினர்களுக்கு விதிக்கவேண்டிய 4 தண்டனைகளையும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பிறகு கண்டனம் தெரிவிக்கப்படும். இதையடுத்து குறிப்பிட்டகால இடை நீக்கம் தண்டனையாக வழங்கப்படும். இவை எதற்கும் கட்டுப்படாத உறுப்பினர்கள் அவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார்கள்.
9 ஒழுங்கு விதிகள்!
மக்களவை நடத்தை விதிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட வி. கிஷோர் சந்திர தியோ தலைமையிலான குழு மக்களவையில் இன்று சமர்ப்பித்த இரண்டாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு:
மக்களவை உறுப்பினர்கள் தங்களது நாடாளுமன்ற அலுவல்கள், பொதுமக்கள் சார்ந்த அலுவல்களை மேற்கொள்ளும்போது 9 பொதுவான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
1.முறையான நடத்தை: உறுப்பினர்கள் முடிவெடுக்கும்போதும் அவற்றைச் செயல்படுத்தும்போதும் காரண காரியத்துடன் பொறுப்புடன் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
2. நேர்மை: உறுப்பினர்களின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகப் புகார் எழுப்பபடும் பட்சத்தில் அதுபற்றி விளக்கமளிக்க வேண்டும். தங்கள் நலனைப் பொதுமக்களின் நலனிற்கு உட்படுத்திச் செயல்பட வேண்டும்.
3. நாணயம்: உறுப்பினர்கள் மிகவும் நாணயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தாங்கள் செயல்படும்போது பொருளாதார ரீதியிலோ, தனிப்பட்ட வேறு காரணங்களுக்காகவோ வெளியாட்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் பணியைப் பாதிக்காத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
4. மனசாட்சியுடன் செயல்படல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கடமைகளை மேற்கொள்ளும்போது முக்கியத்துவதத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும்.
5. வெளிப்படைத் தன்மை: உறுப்பினர்கள் தங்கள் நடவடிக்கைகளில் முடிந்தவரை வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் தங்கள் முடிவுகளின் உண்மைத் தன்மையை சோதனைக்கு உட்படுத்தத் தயங்கக் கூடாது.
6. பொதுநலன்: எல்லா நேரங்களிலும் பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தி, சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு, திறமையாகவும் வலிமையாகவும் உயர்ந்தபட்சத் தரத்துடனும் செயலாற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் உறுப்பினர்கள் வலுப்படுத்த வேண்டும்.
7. பொறுப்புடைமை: தங்களின் நடவடிக்கைகள் பொறுப்புடைமையின் எல்லாக் கூறுகளையும் பூர்த்தி செய்கிறதா என்று உறுப்பினர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். தங்களின் முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரின் ஒப்புதலையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
8. தன்னலமற்ற செயல்பாடு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் எல்லா முடிவுகளையும் பொதுமக்களின் நலன்களுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும். இந்த முடிவுகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ பொருளாதார ஆதாயங்களோ அல்லது வேறு ஆதாயங்களோ இருக்கக் கூடாது.
9. தலைமை: மக்களவை நடத்தை விதிகளை ஆதரிப்பதுடன் தங்களின் தலைமை மூலம் அவற்றை அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அதிகாரங்கள், உரிமைகள் உள்ளிட்டவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க தனித்தனியாக விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனங்கள், அரசுத் துறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அவைகள் உள்ளிட்டவற்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தொடர்பும் அரசுச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் வேண்டுகோளை விரிவாகக் குறிப்பிட்டு அரசுத் தலைமைச் செயலாளருக்குத் தெரிவித்தபிறகே அதன்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.
தண்டனைகள்!
விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பிறகு கண்டனம் தெரிவிக்கப்படும்.இதையடுத்து குறிப்பிட்டகால இடைநீக்கம் தண்டனையாக வழங்கப்படும். இவை எதற்கும் கட்டுப்படாத உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.