முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா தாக்குதல் விமானம் லக்ஷயா, அதிநவீன என்ஜினுடன் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இச்சோதனை நடந்தது.
இதுகுறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "அதிநவீன கட்டுப்பாட்டுக் கருவிகளுடன் கூடிய லக்ஷயா விமானம் இன்று மதியம் 12 மணியளவில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இதில் என்ஜினின் தாங்கும் திறன், அதிகரிக்கப்பட்ட பறக்கும் திறன் ஆகியவை சோதிக்கப்பட்டன" என்றனர்.
வழக்கமாக ஆறு அடி நீளமுள்ள ஒரு மைக்ரோ லைட் விமானத்தின் பறக்கும் திறன் 30 முதல் 35 நிமிடங்கள் வரை இருக்கும். தற்போது பொருத்தப்பட்டுள்ள அதிநவீன என்ஜினின் மூலம் இத்திறன் மேலும் அதிகரிக்கும்.
பெங்களூருவில் உள்ள இந்திய வான்வெளி மேம்பாட்டுக் கட்டமைப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆளில்லா லக்ஷயா விமானம் கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.