Publish Date: Wed, 30 Apr 2008 (14:28 IST)
Updated Date: Wed, 30 Apr 2008 (14:28 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஹர்கத்- உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகரில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோப்பூர் நகரத்தில் பாழடைந்த மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
சரணடைந்துவிடுமாறு பாதுகாப்புப் படையினர் விடுத்த எச்சரிக்கைக்கு கட்டுப்படாத தீவிரவாதிகள் மருத்துவமனைக் கட்டடத்திற்குள் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.
இருதரப்பினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் தீவிரவாதி சஜாத் அஃப்கானி என்ற அஃப்தாப் சுட்டுக் கொல்லப்பட்டான். பாகிஸ்தானைச் சேர்ந்தவனான இவன் ஹர்கத்- உல் முஜாஹிதீன் இயக்கத் தலைவனாகச் செயல்பட்டவன்.