சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இந்தியா தலையிட்டுச் சமரசம் செய்துவைக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், "சிறிலங்க அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மீண்டும் அமைதிப் பேச்சிற்கு அழைத்துவரும் முயற்சியில் இந்திய அரசு முக்கியப் பங்காற்ற வேண்டும்" என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனைபெற்று வேலூர் மத்தியச் சிறையில் இருக்கும் நளினியை பிரியங்கா காந்தி சந்தித்தது பற்றிக் கூறுகையில், "நளினியைச் சந்திப்பதற்குப் பிரியங்கா வந்தது, காங்கிரசால் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தந்திரம்" என்றார் ராஜ்நாத் சிங்.
பணவீக்கம் பற்றி வெள்ளை அறிக்கை!
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசி உயர்வைக் குறைக்கும் விடயத்தில் மத்திய ஐ.மு.கூ அரசு தோல்வியடைந்து விட்டதாகக் குற்றம்சாற்றிய ராஜ்நாத் சிங், பணவீக்கத்திற்கான காரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசிற்குக் கோரிக்கை வைத்தார்.
பணவீக்கத்திற்கு உலகச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விளக்கத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், பணவீக்கம் அமெரிக்காவில் 3 விழுக்காடாகவும் மற்ற வளரும் நாடுகளில் 4 விழுக்காடாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.
அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிர்ப்பு!
அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா கூறியுள்ளது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
அணுசக்தி உடன்பாட்டிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பாக். நீரிணைப்பில் உள்ள ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற பா.ஜ.க. வின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய அவர், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.