மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாற்றின் மீது மத்திய அரசு எப்போது பதிலளிக்கும் என்று கேட்டு பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எழுந்த பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், அமைச்சர் மீதான குற்றச்சாற்று விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கும் என்று அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் இடத்தில் இருந்த வயலார் ரவி அளித்த உறுதிமொழி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கு எரிவாயு வினியோகம் செய்த விவகாரத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங் விடுத்திருந்த கோரிக்கையை சுஷ்மா சுவராஜூம் வலியுறுத்தினார்.
அப்போது இடைமறித்த நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, மத்திய அரசு விரைவில் விளக்கமளிக்கும் என்றார்.