இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக் கோள்களை நாளை விண்ணில் செலுத்துகிறது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 8 நானோ செயற்கைக் கோள்கள் அடங்கும்.
பிஎஸ்எல்விசி9 வாகனம் மூலம் இந்த செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. இந்தியாவின் புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள், மற்றும் இந்தியன் மினி சாட்டிலைட் (ஐஎம்பிஎஸ்1) ஆகிய செயற்கைக் கோள்கள் நாளை செலுத்தப்படுகிறது.
கார்டோசாட்2ஏ எனப்படும் புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் 690 கிலோ எடை கொண்டது. இதில் பான் எனப்படும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கனடா, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக் கோள்கள் வர்த்தக அடிப்படையில் செலுத்தப்படுகின்றன. இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் விண்ணில் செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.