பிரதமர் மன்மோகன் சிங் ஜம்முவில் தனது 2 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணிர்ப் புகை குண்டுகளை வீசினர். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் காணாமல் போன நபர்களின் பெற்றோர்கள் அமைப்பு (ஏ.பி.டி.பி.) என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே உள்ள 18 கிராமங்களில் 1,000 புதிய கல்லறைகள் முளைத்துள்ளதை இந்த அமைப்பினர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து மிதவாத ஹூரியத் கட்சித் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் தலைமையில் 3,000 பேர் "மனித உரிமைகள் மீறல்களை நிறுத்துக" என்ற முழக்கங்களுடன் வீதிகளில் பேரணி நடத்தினர். இந்த பேரணியைக் கலைக்கத்தான் காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளது.
இது குறித்து மிர்வைஸ் உமர் ஃபரூக் தெரிவிக்கையில் "அடையாளம் தெரியாத இந்த திடீர்க் கல்லறைகள் ஏன்? எப்படி வந்தது? எங்களுக்கு நீதி தேவை? இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனர்? பெற்றோர்கள் இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
1989ஆம் ஆண்டு முதல் சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் அமைப்பான ஏ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. இந்த திடீர்க் கல்லறைகளில் இவர்களில் எத்தனை பேர் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை என்று இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காஷ்மீரில் உள்ள உயரதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். பிரிவினைவாத தீவிரவாதிகள் கடத்திச் சென்று இவர்களை கொலை செய்துள்ளனர் என்று காஷ்மீர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த அடையாளம் தெரியாத 1,000 திடீர்க் கல்லறைகள் விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேன்டும் என்று உலக பொது மன்னிப்பு அமைப்பு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.