மத்திய அரசு அவசர தேவைக்காக 5 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பு வைக்க முடிவு செய்துள்ளது.
தற்போது மத்திய அரசு குறிப்பிட்ட அளவு கோதுமை, நெல் போன்ற உணவு தானியங்களை கையிருப்பாக வைக்கின்றது. இது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்குவதற்காவும், மத்திய அரசின் வேலைக்கு உணவு திட்டம் போன்றவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது இல்லாமல் கூடுதலாக 5 லட்சம் டன் உணவு தானியங்களை கையிருப்பாக வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த கையிருப்பு இந்திய உணவு கழக பராமரிப்பின் கீழ் பாதுகாக்கப்படும். இந்த அவசர கால கையிருப்பு, இப்போது பப்பர் ஸ்டாக் எனப்படும் அரசின் தேவை பராமரிக்கப்படும் கையிருப்பு இல்லாமல், கூடுதலாக ஐந்து லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பாக வைக்கப்படும். இந்திய உணவு கழகம் இந்த ஆண்டில் இருந்தே தானியங்களை சேமித்து வைக்க தொடங்கும்.
இந்திய உணவு கழகம், மத்திய கிடங்கு கழகம், மாநில கிடங்கு கழகங்களிடம் உணவு தானியங்களை கையிருப்பு வைப்பதற்கு தேவையான இட வசதி உள்ளது.
தற்போது அரசின் தேவைக்காக ஜீலை 1 ந் தேதி நிலவரப்படி 269 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பாக பராமரிக்கப்படுகிறது.
இந்த வருடம் பிப்ரவரி 29 ந் தேதி நிலவரப்படி இந்திய உணவு கழகத்திடம் 241 லட்சம் டன், மத்திய கிடங்கு கழகத்திடம் 97 லட்சத்து 70 ஆயிரம் டன், மாநில கிடங்கு கழகங்களிடம் 186 லட்சத்து 20 ஆயிரம் டன் உணவு தானியம் கையிருப்பு வைக்கும் வசதி உள்ளது என்று சரத் பவார் தெரிவித்தார்.