விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள பதற்றத்தை அரசியலாக்க வேண்டாமென்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமரின் தகவல் ஆலோசகர் விடுத்துள்ள அறிக்கையில், "விலைவாசி உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் நிலவும் பதற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பற்றாக்குறை நிலவுவது போன்ற தோற்றம் உருவாகுமானால், அது பதுக்கல்காரர்களுக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
"விலைவாசி உயர்வைத் தடுப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதனால், போராட்டம் உள்ளிட்ட பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடத் தேவையில்லை" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இடதுசாரிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதித்த பிறகு பிரதமர் இவ்வாறு அறிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.