அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்தினர்.
புது டெல்லியில் பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் பங்கேற்ற 4 முக்கிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் 6 முக்கியக் கோரிக்கைகளை பிரதமரிடம் தந்ததுடன், அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "விலைவாசி உயர்வு உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ள 6 கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
பிரதமரின் பதில் பற்றிக் கேட்டதற்கு, தங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்ததாக கூறினார் காரத்.