பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும் விடயத்தில் மத்திய ஐ.மு.கூ அரசு தோல்வியடைந்து விட்டதாகக் கூறி தே.ஜ.கூ. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று இரண்டு மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டன.
மக்களவையில் இன்று கேள்விநேரம் துவங்கியவுடன் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர். இதைக் காங்கிரஸ் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித்ததால் அவையில் கடும் கூச்சல் குழுப்பம் நிலவியது.
உத்தரப் பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடு குறித்து மத்திய உரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானிடம் கேள்வி எழுப்பிய பகுஜன் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் பிரஜேஷ் பதாக்கின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவரை அவையிலிருந்து வெளியேற்றும்படி அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
மேலும் அவையின் மையப்பகுதியில் கூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத காரணத்தால் அவை தள்ளிவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதேநிலை காணப்பட்டது. நண்பகலுக்கு 5 நிமிடம் முன்னதாக பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளியேறினர். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். இதையடுத்து அவை தள்ளிவைக்கப்பட்டது.