விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்விற்குக் காரணமான மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், பி.ஜெ.டி., அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் மனிதச் சங்கிலி நடத்தினர்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
"காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது" என்றார் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்.
இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வி.கே.மல்ஹோத்ரா, ஹேம மாலினி, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர்கள் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், சரத் யாதவ், சிவ சேனா தலைவர் மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவர்கள் தங்கள் கைகளில், "விலைவாசி உயர்விற்கு காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும்தான் பொறுப்பு", "விலைவாசி உய்ர்வைக் கட்டுப்படுத்து அல்லது ஆட்சியை விட்டு வெளியேறு" என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.