புனேயில் திருமணத்திற்கு சென்ற படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்ததில் 19 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு மகாராஷ்டிரா மாவட்டம் வெல்வான்ட் கிராமத்தை சேர்ந்த 28 பேர் அருகில் உள்ள வாகம்பா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு பாக்கார் ஏரியை கடப்பதற்காக படகில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
படகு ஏரியின் நடுப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது. இதில் படகு ஏரியில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று 9 பேரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 19 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் அதிகம்பேர் பெண்கள், குழந்தைகள். காணாமல் போன உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.