பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள், ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து புதுவை ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ ஆராய்ச்சிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) சட்ட வரைவு 2007 மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
கடந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்ட இந்தச் சட்ட வரைவு மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பிற்கு வந்தது.
இதை தாக்கல் செய்த மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் யாவும் கவனத்தில் கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் சட்ட வரைவு திருத்தப்பட்டுள்ளதால் அனைவரும் இதை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட பலர் வரவேற்புத் தெரிவித்ததுடன், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் நோயாளிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஏழை நோயாளிகளுக்கு உதவும் வகையிலும், உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஜிப்மரில் கல்வி வாய்ப்பு அளிக்கும் வகையிலும் புதிய சட்ட வரைவு அமைய வேண்டும் என்று பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
ஜிப்மர் ஊழியர்களின் போராட்டத்தினால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் அமைச்சர் அன்புமணி, உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, ஜிப்மரில் போராட்டம் நடத்திய ஊழியர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்றும், அவர்கள் வெகு தொலைவிற்கு மாற்றப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.
முன்னதாகப் பேசிய சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் பன்வாரி லால் சன்சால், சுகாதார நிறுவனங்களில் அமைச்சரின் அரசியல் தலையீடு எவ்வாறு பிரச்சனையை உருவாக்குகிறது என்பது டெல்லி எய்ம்ஸ் விவகாரத்தில் இருந்து தெரியவருகிறது என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்ச், கடந்த 6 மாதங்களாக பெருமைக்குரிய எய்ம்ஸ் நிர்வாகம் அமைதியாக இயங்கிக்கொண்டு இருப்பதன் மூலம் பிரச்சனைக்குக் காரணம் யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து புதுவை ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ ஆராய்ச்சிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) சட்ட வரைவு 2007 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.