இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்குச் செல்வதற்கு முன்னர் அது குறித்து நமது நாடாளுமன்றத்தின் உணர்வினை அறிவோம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி அளிப்பது தொடர்பான இதழியல் கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
சர்வதேச அளவில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று சில கட்சிகள் கூறுகின்றனவே என்று கேட்டதற்கு, “இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி ஒப்புதலிற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்னர், அது குறித்து நமது நாடாளுமன்றத்தின் உணர்வை அறிவோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு நிர்பந்தம் இல்லையென்றாலும், இதனை அரசு செய்யும்” என்று பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உள்ள 3 கட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் கருத்தறிவோம் என்ற பிரணாப் முகர்ஜி, அந்த 3 கட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.
“முதலில் 123 ஒப்பந்தம், அது முடிந்துவிட்டது. இரண்டாவது, சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் இந்தியாவிற்கென தனித்த ஒப்பந்தம் உருவாக்குவது, அது நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவதாக அணு தொழில் நுட்ப நாடுகள் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம். இது மூன்றும் முடிந்த பிறகுதான் நமது நாடாளுமன்றத்தின் கருத்தறியப்படும்" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.