கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நகர்ப்புறங்களில் பணியாற்றும் பெண்களைவிட நாளொன்றுக்கு ரூ.67.66 குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.
தினசரி வருவாய் சராசரியாக கிராமப்புற பெண் தொழிலாளர்களுக்கு ரூ.85.53 ஆகவும், நகர்ப்புறப் பெண் தொழிலாளர்களுக்கு ரூ.153.19 ஆகவும் உள்ளது.
மாநிலங்களவையில் இன்று வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நல அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்ணான்டஸ் கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
"கிராமப்புறப் பெண்கள் பெரும்பாலும் ஊதியம் அதிகம் தரப்படாத பண்ணை வேலை, தோட்ட வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். அதேநேரத்தில் நகர்ப்புறப் பெண்கள் அதிக ஊதியத்திற்கு வாய்ப்புள்ள சேவைத் துறை, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.