கடைசி கட்டத் தேர்தல் முடியும் வரை எந்தவிதமான வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட நாள் முதல் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை எந்தவிதமான கருத்துக் கணிப்புகளின் முடிவுகளையும் வெளியிடுவதைத் தடை செய்யும் வகையில் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று கூறினார்.
பெண்களுக்கு முக்கியத்துவம்!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் அங்கீகாரத்தைத் தககவைத்துக்கொள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் குறிப்பிட்ட விழுக்காடு பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்தார்.