கொல்கத்தா: மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து நடத்தும் மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு காரணமாக இன்று மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை எதிர்த்தும், திருணாமூல் தலைவர் மம்தா பானர்ஜி வாகனம் மீது நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலை எதிர்த்தும் இந்த முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
ஹௌரா, சியால்தா ரயில்வே கோட்டங்களில் உள்ள பல ரயில் நிலையங்களில் ஆர்பாட்டக்காரர்கள் இருப்புப் பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹௌரா-ராஞ்சி ஷதாப்தி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. ஹௌரா-தன்பாத் விரைவு ரயில் பால்லி நிலையத்தில் ஆர்பாட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்துகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன.
கொல்கத்தாவில் கடைகளும், விற்பனை நிலையங்களும் மூடிக்கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.