உயர் கல்வி படிப்பதற்காக இதர பிற்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டே 27 விழுக்காடு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மத்திய அரசு உத்தரவு செல்லும்' என்று உறுதி செய்தது. இதில் கிரீமிலேயர் (வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு) பற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 10ஆம் ந் தேதி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு (2008-2009) முதலே 27 விழுக்காடு ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை மனித வளத்துறை அனைத்து மத்திய அரசு நிதி உதவி பெறும் ஐ.ஐ.எம். (நிர்வாக இயல் கல்லூரிகள்) மற்றும் ஐ.ஐ.டி. (என்ஜினீயரிங் உயர் கல்வி கல்லூரி) ஆகியவற்றுக்கு எழுதி இருக்கிறது.
இந்த கடிதத்தில், "ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 விழுக்காடு தவிர 15 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும், 7.5 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
27 விழுக்காடு ஒதுக்கீடு சரியாக அமல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேஷ அதிகாரம் படைத்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.