இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரின் இல்லத்தில் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், இலங்கை இனப் பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டுச் சமரசத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறிலங்கப் படையினரின் கடுமையான தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பிரதமரிடம் எடுத்துக்கூறிய மருத்துவர் ராமதாஸ், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அரசியல் தீர்வுகாண உதவ வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சார்க் மாநாட்டில் சிறிலங்கா அதிபரிடம் பேசப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார் என்றார்.