மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறியவர்களை (கிரீமி லேயர்) தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், இட ஒதுக்கீடு வழங்கும் போது சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேறியவர்களை (கிரீமி லேயர்) தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பரவலாகப் பலர் வரவேற்றபோதும், அதற்கு நிகராக எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் புது டெல்லியில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் என்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளதோ அதை அமல்படுத்த முயற்சிப்போம். இந்த விடயத்தில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. அதாவது, உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளுக்கும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
கிரீமி லேயர் உள்ளிட்ட எல்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கத்தான் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது என்றாலும், உயர் கல்வி நிறுவனங்களில் இது பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.
ஆனால் வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினரும் பயன்பெற முடியும்.
மத்திய அமைச்சரவையின் முடிவு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொள்ளும் தகவல் தொடர்பிற்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.