தலைநகர் டெல்லியில் நெருக்கடி நிறைந்த பகுதிகள் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக உள்ளதால், அப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உள் விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், "டெல்லியில் நெருக்கடி நிறைந்த பகுதிகள் பயங்கரவாதிகளின் முக்கிய இலக்காக உள்ளன. குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஆபத்து அதிகம்" என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசிய குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், வரவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு டெல்லி காவல்துறையின் பலத்தையும், அதற்கான நிதியையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு கூடுதலாக 700 பெண்கள் உள்ளிட்ட 5,000 காவலர்களை டெல்லிக் காவல்துறையில் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் விளையாட்டைக் காணக் குவியும் ரசிகர்களின் எண்ணிக்கை, டெல்லியின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில் இந்த எண்ணிக்கை போதாது என்று கருதப்படுகிறது.