குஜராத் மாநிலத்தில் வடோதரா அருகே நர்மதா கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 15 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வடோதராவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பொடேலி கிராமத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்தது.
இதுவரை பேருந்து ஓட்டுனர் உள்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், இதில் பெரும்பாலானோர் பள்ளிச் சிறுவர்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய் நேக்ரா தெரிவித்தார்.
மேலும், 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கல்விச் சுற்றுலாவுக்காக 5 முதல் 11-ம் வகுப்பு வரையிலான 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்போட் கிராமத்தில் இருந்து பொடேலிக்கு குஜராத் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் பேருந்து, பொடேலியில் பாலத்தைக் கடந்தபோது, நிலை தடுமாறி நர்மதா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் 5 பேர் தண்ணீரில் இருந்து நீந்தி கரையேறி அருகில் உள்ள கிராமத்தினரிடம் விபத்து குறித்த தகவலைத் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், மேலும் பல மாணவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.