தலைநகர் டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கவுள்ள பாதையில் திடீரென்று நுழைந்த திபெத்தியர்கள் சுமார் 30 பேர் தாங்கள் வைத்திருந்த சுடருடன் சீன அரசைக் கண்டித்து முழக்கமிட்டபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திபெத்தில் சீனப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த ஆண்டு சீனா நடத்தவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தலைநகர் புது டெல்லியில் வருகிற 17 ஆம் தேதி நடக்கவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாகவும் திபெத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கவுள்ள ராஜபாதை பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு சுமார் 30 திபெத்தியர்கள் குவிந்தனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தனர்.
இருந்தாலும், காவலர்களைத் தள்ளியபடி குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு ராஜபாதையில் நுழைந்த திபெத்தியர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த சுடரை ஏந்தியபடி இந்தியா கேட் வரை ஓடினர்.
ஒலிம்பிக் சுடரைக் கேளி செய்யும் வகையில் திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக இந்தியா கேட் அருகில் அவர்களைத் தடுத்து நிறுத்தி சுடரை அணைத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 27 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலின்போது சுடரில் இருந்த தீ பட்டு அதிகாரி ஒருவர் உட்பட 2 பேருக்குக் காயம் ஏற்பட்டது.