விலைவாசி உயர்வு, பணவீக்கத்தைக் கண்டித்து இடதுசாரிக் கட்சியினரும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரும் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளும், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஏற்பட்ட அமளியால் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டன.
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சியினரும் இணைந்து கொண்டனர்.
இதுகுறித்து சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் கூறுகையில், இது ஒரு முன்னெச்சரிக்கைப் போராட்டம் அல்ல, உண்மையான போராட்டம் என்றார்.
"நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4 விழுக்காடாக இருந்தபோது விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடாக அதிகரித்துள்ள இந்த நேரத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை" என்றார் அமர்சிங்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறுகையில், "விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கடந்த மூன்று கூட்டத் தொடர்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
பணவீக்க உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 23 ஆம் தேதி வரை ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தெருவில் இறங்கிப் போராட்டங்கள் நடத்தவுள்ளோம்" என்றார்.
பலவீனமான பொதுவினியோக முறை, ஊக வணிகத்தில் அத்தியாவசியப் பொருட்களைச் சேர்த்தது ஆகியவைதான் பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் யச்சூரி குற்றம்சாற்றினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.