Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலை உயர்வு: அமைச்சரவை குழுக் கூட்டம் தள்ளிவைப்பு!

விலை உயர்வு: அமைச்சரவை குழுக் கூட்டம் தள்ளிவைப்பு!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (16:40 IST)
உருக்கு விலை உயர்வு தொடர்பாக மத்திய நிதி அமைச்ருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், விலை உயர்வு பற்றி பரிசீலிக்க இன்று கூடுவதாக இருந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

உருக்கு, இரும்பு தகடு, கம்பி விலைகள் இது வரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமான தொழில்கள், வாகன உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் சிறு மற்றும் குறுந் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிமெண்ட், உருக்கு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற வாரம் சிமெண்ட் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அத்துடன் உருக்கு ஏற்றுமதி மேம்பாட்டிற்காக வழங்கி வந்த சலுகையை ரத்து செய்தது.

உருக்கு உற்பத்தி செய்ய மூலப் பொருட்களான இரும்பு தாது, கோக் எனப்படும் உலைக் கரி, இயற்கை எரிவாயு விலை அதிகரித்து விட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் அதிகரித்து விட்டது.

இதனால் உருக்கு உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதால், விலை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று உருக்கு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் உருக்கு விலை உயர்வை தடுக்க உருக்கு ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, இரும்பு தாது ஏற்றுமதி மீது ஏற்றுமதி வரி அதிகரிப்பது, உருக்கு மீதான உற்பத்தி வரி குறைப்பது உட்பட பல்வேறு முடிகளை எடுக்க மத்திய அமைச்சரவையின் விலை தொடர்பான குழு கூட்டம் இன்று கூடுவதாக இருந்தது.

இந்நிலையில் உருக்கு உற்பத்தி வரியை குறைப்பதால், வருவாய் இழப்பு ஏற்படும் என நிதி அமைச்சகம் கருதுகிறது. உற்பத்தி வரி குறைப்பதால் மட்டும் உருக்கு விலை உயர்வை தடுக்க முடியாது. உள்நாட்டு விலை நிர்ணயிப்பிற்கு, மற்ற நாடுகளில் நிலவும் விலையே காரணம் என்று நிதி அமைச்சகம் கருதுவதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்தனர்.

உருக்கு விலை உயர்வுக்கு இரும்பு தாது விலையும் காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதனால் இதன் ஏற்றுமதியை தடை செய்யவும், அல்லது ஏற்றுமதி வரியை அதிகரிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இதற்கு வர்த்தக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத் சென்ற வாரம், ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு தாது ரகத்தை உள்நாட்டு உருக்கு ஆலைகள் பயன்படுத்துவதில்லை. இதன் ஏற்றுமதியை தடை .செய்வதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் இரும்பு தாது விலை அதிகரித்துவிட்டது. இதை ஒட்டி உள்நாட்டு சந்தையிலும் இரும்பு தாது சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இதன் விலையை உயர்த்தியுள்ளன.

இந்நிலையில் இன்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலை உயர்வு பற்றி பரிசீலிப்பதற்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் கூடிய விரைவில் நடக்கும். எந்த தேதியில் கூடும் என்பது எனக்கு தெரியாது. இந்த கூட்டத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil