விலைவாசி உயர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இன்று துவங்கியது. இதில் விலைவாசி உயர்வு விவகாரத்தை முக்கியப் பிரச்சனையாக எழுப்ப பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் திட்டமிட்டிருந்தன.
மக்களவை இன்று காலை கூடியதும் எழுந்த பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதையடுத்து அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மறைந்த இரண்டு உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் எழுந்த சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் சில பா.ஜ.க. உறுப்பினர்களும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் திறமையில்லாத அரசை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து விலைவாசி உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
தனது வேண்டுகோளை ஏற்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தவறு செய்யும் உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பெடுக்கும்படி உத்தரவிட்டார்.
இருந்தாலும் அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் முதலில் 11.30 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் மக்களவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது.
மாநிலங்களவை தள்ளி வைப்பு!
மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வைக் கண்டித்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 50 உறுப்பினர்களின் அறிமுக நிகழ்ச்சி முடிந்ததும், கேள்வி நேரம் துவங்குவதாக அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.
அப்போது எழுந்த பா.ஜ.க. உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி, "இன்றைய கேள்வி விலைவாசி உயர்வு மட்டுமே" என்று கூறினார்.
இதையடுத்து எழுந்த பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதைத் தொடர்ந்து முதலில் 10 நிமிடமும் பின்னர் நாள் முழுவதும் அவை தள்ளிவைக்கப்பட்டது.