சிறுபான்மை, தனியார் கல்வி நிறுவனங்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டில் சமத்துவம் தலைக்க அரசியல் ஜனநாயகம் மட்டும் போதாது. பொருளாதார ஜனநாயகமும், சமூக நீதி ஜனநாயகமும் வேண்டும்.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சிறுபான்மை, தனியார் கல்வி நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும்" என்றார்.
"மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.
மேலும், கல்வியில் மக்கள் பின்தங்க சாதியும் ஒரு காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்ற ராஜா, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் `கிரீமி லேயர்' முறையை பயன்படுத்துகிறார்கள். கல்வி நிலையங்களில் எக்காரணத்தை கொண்டும் `கிரீமி லேயர்' இடம் பெறக் கூடாது என்றார்.