மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தக் கல்வி ஆண்டு முதலே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் பி.டி.ஐ. நிறுவனத்திடம் அவர் கூறுகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்போவதில்லை என்றார்.
அதேநேரத்தில் கிரீமி லேயர் எனப்படும் அதிக வருமானம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதைத் தானும் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு விதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, "இப்போது அத்தகைய எண்ணம் இல்லை. முக்கியமான அடிப்படைப் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது" என்றார் அவர்.
கிரீமி லேயர் குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து வேறுபாடு உள்ளது. இதுபற்றி ஆராய்வதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்கும். இக்கூட்டத்தின் மூலம், உச்ச நீதிமன்றத்திடம் மோதுவதை விட்டுவிட்டு கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களை ஆராய்வதே அரசின் நோக்கம் என்றார் அர்ஜூன் சிங்.
தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு!
இதேபோல "அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதைக் கட்டாயமாக்கச் சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.
ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அடுத்தவாரம் உத்தரவு அனுப்பப்படும்" என்றார் அவர்.