ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு காவல்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்தப் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
பரிந்துரைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக அமைச்சரவை கருதியதை அடுத்து, அவற்றை மறு ஆய்வு செய்ய அரசுச் செயலர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக் குழுவினை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் தலைவராக அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் இருப்பார் என்றும் அவர் கூறினார்.
இந்த உயர்மட்டக் குழு, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் மீது மத்திய அமைச்சரவை முடிவெடுக்கும் என்றார் கபில் சிபல்.
முன்னதாக ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஆயுதப் படை அதிகாரிகளின் கோரிக்கைகளை கவனிப்பதற்காக நிதித்துறைச் செயலர் டி.சுப்பாராவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.