மனித உரிமைகளை மதிக்காத சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி திபெத்தியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு கடந்து வாழும் திபெத்தியர்கள் இன்று தலைநகர் டெல்லியில் சீன அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் பங்கேற்றனர்.
சீன அரசைக் கண்டித்து முழக்கமிட்ட அவர்கள் சீனக் கொடிகளையும் சாலையில் போட்டு எரித்தனர். மனித உரிமைகளை மதிக்காத சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செரிங் வாங்கலே என்பவர் கூறுகையில், "பீஜிங்கில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். இந்தியாவிற்கு வரவிருக்கும் ஒலிம்பிக் சுடருக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.
முன்னதாக, உலகெங்கும் சுற்றிவரும் ஒலிம்பிக் சுடர் இந்தியாவிற்கு வருகிற 17 ஆம் தேதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.