ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் வரவேற்றுள்ளார்.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியதும் அதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அர்ஜூன் சிங், "இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள்." என்றார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.