பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சை மே 20 ஆம் தேதி மீண்டும் துவக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
முதலில் அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலும், பின்னர் அயலுறவு அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுக்கள் துவங்கி நடக்கவுள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நான்காவது கட்ட அமைதிப் பேச்சை முடிக்கும் பொருட்டு இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் இஸ்லாமாபாத் சென்று பாகிஸ்தான் அயலுறவுச் செயலர் ரியாஸ் முகமது கானைச் சந்திக்கவுள்ளார்.
அதற்கு அடுத்த நாள், இதுவரை நடந்துள்ள பேச்சுக்களின் மூலம் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியும் விவாதிக்கவுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமைதிப் பேச்சுக்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டிய நிலையில், பாகிஸ்தானில் நேர்ந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து வந்த நான்காவது சுற்றுப் பேச்சுக்களில் இருதரப்பிலும் தலா 8 விவகாரங்கள் இறுதிகட்டத்தை எட்டின. இருந்தாலும் பாகிஸ்தானில் நேர்ந்த அரசியல் நெருக்கடி காரணமாக இப்பேச்சு அயலுறவுச் செயலர்கள் மட்டத்தில் கூட இறுதி செய்யப்படாமல் நின்று போனது.
தற்போது மீண்டும் துவக்கப்படவுள்ள பேச்சில், நான்காவது கட்டம் இறுதி செய்யப்படுவதுடன், ஐந்தாவது கட்டப் பேச்சுக்களைத் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.