கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன்பிறகு நடந்த கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நானாவதி குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நீதிபதி அக்க்ஷய் மேத்தாவிற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன் கலவரங்கள் நடந்த 2002 ஆம் ஆண்டு நானாவதி குழுவை குஜராத் அரசு நியமித்தது.
முதலில் கோத்ரா ரயில் எரிப்பு பற்றிய விசாரணைக்காக நீதிபதி கே.ஜி.ஷாவை மட்டுமே குஜராத் மாநில அரசு நியமித்தது. பிறகு நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் குழுவாக மாற்றப்பட்டது. அப்போது குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக நானாவதி குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் நீதிபதி கே.ஜி.ஷாவின் மறைந்தார். அவருக்குப் பிறகு நீதிபதி அக்க்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி அக்க்ஷய் மேத்தாவிற்குக் கடும் எதிர்ப்பு!
இந்நிலையில் நீதிபதி அக்க்ஷய் மேத்தாவிற்கு, கோத்ரா வழக்குகளின் விசாரணையில் உதவிவரும் ஜன் சங்கார்ஷ் மன்ச் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
"நீதிபதி அக்க்ஷய் மேத்தாவிற்கு எதிராக கடும் குற்றச்சாற்றுகள் உள்ளன. நரோடா பாட்டியா வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்ஜி ஒருமுறை பேசும்போது, நீதிபதி அக்க்ஷய் மேத்தா தனக்கு ஆதரவானவர் என்பது போலப் பேசினார். இத்தகைய குற்றச்சாற்றுகளுக்கு ஆளான நீதிபதி அக்க்ஷய் மேத்தாவை நானாவதி குழுவில் நியமிக்கக் கூடாது" என்று ஜன் சங்கார்ஷ் மன்ச் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறியுள்ளார்.
"இந்தக் குற்றச்சாற்றுகள் சரியா தவறா என்பது வேறு விடயம். குஜராத் அரசு தன்னுடைய முடிவை மாற்ற வேண்டும். நானாவதி குழுவில் இடம்பெறுவதற்காக நாங்கள் 5 நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கிறோம். அதில் ஒருவரை வேண்டுமானால் நானாவதி குழுவில் நியமிக்கலாம்" என்றும் முகுல் சின்ஹா கூறினார்.