ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்திவைக்கும் முடிவைத் தமிழக முதல்வர் கருணாநிதிதான் எடுத்தார் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்துப் புது டெல்லியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒகேனக்கல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டார் என்பது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது" என்றார்.
"தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை சரியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் விரும்புகிறார். இரு மாநில மக்களிடையில் நிலவும் பதற்றமான அமைதியற்ற சூழல் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்.
கருணாநிதியின் அறிவிப்பு கர்நாடக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது" என்றார் அவர்.
முன்னதாக பெங்களூருவில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த வீரப்ப மொய்லி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.