இமய மலையில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலிற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஏராளமான ஹிந்து பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.
வைஷ்ணவி தேவி கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கட்ரா முகாமிற்கு ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 52 பாகிஸ்தானி ஹிந்து யாத்ரிகர்கள் வந்தனர். திரிகுடா பவனில் தங்கிய அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குகைக் கோவிலில் தரிசனத்தையும் பூஜைகளையும் முடித்துக்கொண்டு திரும்பும் பாகிஸ்தானி பக்தர்கள் பவான் விடுதியில் தங்கவுள்ளனர். பின்னர் கட்ரா முகாமிற்கு நாளை வருகின்றனர். இதையடுத்து மற்ற புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள ஜக்காபாபாத், கஷ்மோர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 15 நாட்கள் சுற்றுலா விசாவின் அடிப்படையில் கடந்த 5 ஆம் தேதி வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்.
தங்களின் 15 நாள் பயணத்தில் அமிர்தசரஸ், ஹரித்துவார் போன்ற புனிதத் தலங்களுக்கும் செல்கின்றனர்.
கடந்த 1986 ஆம் ஆண்டு ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி அறக்கட்டளை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இக்கோவிலுக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பக்தர்கள் வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.