நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் எல்லா பொதுநல வழக்குகளும் மோசமானவை அல்ல என்றும், அவற்றை தூக்கி எறிந்து கிடப்பில் போட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, "எந்தெந்த வகைகளில் பொதுநல வழக்குகள் போதுமான விளைவை உண்டாக்கியுள்ளன அல்லது எங்கெங்கு அவை குறிப்பிடத்தக்க விளைவை உண்டாக்கவில்லை என்று ஆதாவது ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன், பொதுநல வழக்குகள் எல்லாம் மோசமானவை என்று கூற முடியாது என்றது.
குறிப்பாக யமுனை ஆற்றைச் சுத்தப்படுத்தும் திட்டத்தில் ரூ.1,400 கோடி விரயமானதை வெளிக்கொண்டு வந்தது ஒரு பொதுநல மனுதான் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுபோன்ற பொதுநல வழக்குகள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், "இவ்வழக்குகளால் ஏதேனும் நல்ல விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்டால் அதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுகின்றன என்று விமர்சித்தது.
மேலும், "அதிகமான பணிச்சுமை காரணமாகவே பொதுநல வழக்குகளின் மீது எங்களால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியாது" என்று நீதிபதிகள் கூறினர்.
நிறைய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் தன்னிச்சையாகக் பிறப்பிப்பது இல்லை. அதற்குரிய வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகே வழங்குகிறது என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தலைமையிலான அமர்வு அண்மையில் யமுனை ஆற்றை "ஒரு நாறும் சாக்கடை" என்று கூறியிருந்தது.
மேலும், இந்தச் சாக்கடைக்குள் ரூ.1,400 கோடி மூழ்கிவிட்டது என்றும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் நிலைமையைச் சீர்படுத்தத் தவறிவிட்டன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.