அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையீட்டின் பேரில்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் எம். வீரப்ப மொய்லி கூறினார்.
பெங்களூருவில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தின் மீது சோனியாவிற்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பு உள்ளது" என்றார்.
காங்கிரஸ் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கமளித்திருந்த நிலையில் வீரப்ப மொய்லியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக கருணாநிதி விடுத்திருந்த அறிக்கையில், கர்நாடாகாவில் மே மாதம் நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசுடன் விவாதிக்கும் பொருட்டு தற்காலிமாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இரு மாநிலங்களிலும் நடந்துவரும் வன்முறைகளைத் தடுக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இரு மாநில மக்களின் நலன் கருதியே தான் இந்த முடிவை எடுத்ததாகவும், காங்கிரஸ் வேண்டுகோளின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார்.