ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் காவல் படைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய வாகனமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
ஜார்கண்டில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தாக்குதலைச் சமாளிப்பதற்காக உள்ளூர் மக்கள் இணைந்து காவல் படைகளை உருவாக்கியுள்ளனர்.
கும்லா மாவட்டத்தில் உள்ள சேனெரா கிராமத்தைச் சேர்ந்த சாந்தி சேனா என்ற இத்தகைய காவல் படையினர் 8 பேர் இன்று கும்ரா என்ற இடத்தில் இருந்து தலைநகர் கும்லாவிற்கு வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் காவல் படையினரின் வாகனத்தை மறித்துத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்துக் காவல் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த மோதலில் காவல் படையினர் 8 பேரும் கொல்லப்பட்டனர். காவல் படையினரின் வாகனத்திற்கு நக்சலைட்டுகள் தீ வைத்துக் கொளுத்தினர்.
இருந்தாலும், காவல் படையினர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்களா அல்லது வாகனத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்களா என்று தெரியவில்லை என்று காவல்துறை டி.ஐ.ஜி. கே.முல்லிக் தெரிவித்தார்.