''புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்று விரைவில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மத்திய திட்டத்துறை இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள வி.நாராயணசாமி நேற்று தனது அலுவலகத்துக்கு சென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, ஜவுளிப் பூங்கா, சுற்றுலாத் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
புதுச்சேரியை இந்தியாவின் சிங்கப்பூராக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள், மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச மருத்துவம், ஜிப்மரில் மருத்துவ பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கட்டண சலுகை, ஜிப்மர் ஊழியர்களை தொடர்ந்து அரசு ஊழியர்களாக நீடிக்க அனுமதி ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைவில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று நாராயணசாமி கூறினார்.