பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசி உயர்வைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி வலியுறுத்தினார்.
அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்று இடதுசாரிக் கட்சிகள் குற்றம்சாற்றியிருந்தன.
மேலும், விலைவாசி உயர்விற்கு முக்கியக் காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து வருகிற 16 ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு நாடுதழுவிய போராட்டம் நடத்தப் போவதாக இடதுசாரிக் கட்சிகளும் ஐ.தே.மு.கூட்டணிக் கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று புது டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் இடதுசாரிகள், ஐ.தே.மு.கூட்டணிக் கட்சிகளின் விலைவாசி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சீதாராம் யச்சூரி விளக்கியுள்ளார். அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும், இச்சந்திப்பின் போது அணுசக்தி உடன்பாடு பற்றியும் பேசப்பட்டுள்ளது. எனினும் அதன் முழு விவரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை.
இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்திய பேச்சு தொடர்பாக இந்த மாத மத்தியில் இடதுசாரி- ஐ.மு.கூ. உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இடதுசாரிகளிடம் மத்திய அரசு விளக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.