Publish Date: Mon, 07 Apr 2008 (14:58 IST)
Updated Date: Mon, 07 Apr 2008 (14:58 IST)
விலைவாசி உயர்வைக் கண்டித்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, இடதுசாரிகள்- ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போதைக்கு விலை உயர்வினைக் கண்டித்து மட்டும் அமையும் என்றார்.
பணவீக்கத்திற்கான காரணங்களாக மத்திய அரசு புரிந்துகொண்டுள்ள விடயங்களில் தவறுள்ளதாகவும், அதைச் சரிசெய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது வினியோகம் ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ள அத்தியாவசியமான 25 விவசாய உற்பத்திப் பொருட்களின் மீதான ஊக வணிகத்தைத் தடை செய்ய வேண்டும், பொது வினியோக முறையை பரவலாக்க வேண்டும், பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏப்ரல் 17 மற்றும் 18 தேதிகளில் புறக்கணிப்புப் போராட்டம் நடத்துமாறு எங்கள் கட்சிக் கிளைகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
கட்டுக்கடங்காத விலைவாசி உயர்விற்குக் காரணமான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதற்கேற்ற மிகப்பெரிய அரசியல் விலையைக் கொடுத்தாக வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் வளர்ச்சி ஏற்கெனவே பெரும்பாலான மக்களைப் பாதித்துள்ளது. சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய ஐ.மு.கூ. அரசு எதையும் செய்யவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறினார்.