''ஒகேனக்கல் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அதன் எல்லையை வரையறுக்க வேண்டும்'' என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்தார்.
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பெங்களூருரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகத்தில் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைப்பதாக கூறி இருக்கிறார். இதில் இரு மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்சினை தவிர எல்லை பிரச்சினையும் இருக்கிறது.
மத்திய அரசும், பிரதமரும் இதில் உடனடியாக தலையிட்டு நில அளவை செய்து ஒகேனக்கல் எந்த மாநிலத்திற்குள் வருகிறது என்பதனை உறுதி செய்து அறிவிக்க வேண்டும். அப்போது தான் இரு மாநிலங்களுக்கிடையே நிரந்தமான அமைதியை ஏற்படுத்த முடியும்.
தற்போது கருணாநிதி கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு உருவாகிற வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். இது பாகிஸ்தானில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் உயிரோடு இருக்கும் இந்தியரான சரப்ஜித்சிங் நிலைக்கு ஒப்பானது.
கருணாநிதி மத்திய அரசுடன் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டி தமிழகத்திற்கு சாதகமாக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். கர்நாடக மக்களை தண்ணீர் பிரச்சினை மற்றும் எல்லை பிரச்சினையில் தமிழ்நாடு, ஆந்திரம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் உதவியோடு தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இந்த 3 மாநிலங்களுக்கும் அவர்களது குடிநீர் தீர்த்து வைக்க கர்நாடகம் தண்ணீர் வழங்கி வருகிறது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
மேலும் கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கூறுவது, இதை காரணம் காட்டி யாரோ தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என சந்தேகம் தோன்றுகிறது. நடந்து முடிந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது இது மொத்தமுமே ஏற்கனவே திட்டமிட்டு நடத்தியது போன்று இருக்கிறது. இந்த பிரச்சினைகள் கர்நாடகாவில் ஓட்டு வாங்க தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினிமா என்று மதசார்பற்ற ஜனதாதளம் கருதுகிறது.
கர்நாடகாவில் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லையென்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களை கொண்டோ அல்லது நாடாளுமன்ற கூட்டு குழுவை கொண்டோ உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்கலாம். இதை விட்டுவிட்டு புதிய அரசு வரும் வரை திட்டத்தை ஒத்திவைப்பது என்பது தேர்தல் வெற்றியை காரணமாக கொண்டு காங்கிரஸ் நடத்தும் நயவஞ்சக நாடகம் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.
எல்லை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாநில தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் இந்த பகுதியினை பார்வையிட்டு நில அளவை செய்து முடிவு செய்ய வேண்டும். 1998-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜனதா இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு தற்போது மக்களிடையே நடிக்கிறது.
இந்த பிரச்சினைக்காக சிறை செல்லும் நிலை ஏற்பட்டாலும் நான் எந்த நேரமும் தயாராக இருக்கிறேன். இந்த கையெழுத்து இயக்கத்துடன் நியாய யாத்திரை ஒன்றும் செல்ல இருக்கிறேன். இந்த இரு நடவடிக்கைகளின் மூலமும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பாதிப்புகளை மதசார்பற்ற ஜனதாதளம் தடுத்து கர்நாடகத்தை காப்பாற்றும் என்று தேவகவுடா கூறினார்.