ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஆதரவளித்து ரஜினி பேசிய நிலையில், அவரது திரைப்படங்களை புறக்கணிக்க கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ் திரையுலகினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசிற்கும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் ஆதரவளித்து பேசினார்.
இந்நிலையில், "கர்நாடகாவில் ரஜினி நடித்த திரைப்படங்களை திரையிட விடமாட்டோம். அவரை கர்நாடகாவிற்குள் வரவும் அனுமதிக்க மாட்டோம்" என்று போராட்டக் குழுக்களுக்கு தலைமையேற்றுள்ள வட்டாள் நாகராஜ் கூறினார்.
கர்நாடகா எல்லைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் மேலும் கூறுகையில், "ரஜினிகாந்த் கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர்" என்றார்.
முன்னதாக, "பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளும் தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... இதை எதிர்ப்பவர்களை உதைக்காமல் என்ன செய்வது?
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் ன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.
என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.
கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பா.ஜ.க.) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசியது குறிப்பிடத்தக்கது.